ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 ஒன்றியங்களில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சங்க தற்செயல் விடுப்பு போராட்டத்தால், அலுவலக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் உள்ள 434 ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்களில் 233 பேர் நேற்றைய விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் கூறுகையில்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவல பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர் அதிகாரிகளால் அலுவலர்களுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்பட்டு வருகிறது. கால அவகாசமின்றி வேலை செய்து வருவதால் கூடுதல் பணிச்சுமையுடன் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே  கூடுதல் பணியாளர்களை நியமித்து புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும், கணினி உதவியாளர்களுக்கு முறையான ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவி இயக்குனர் அளவிலான பதவி உயர்வு வழங்க வேண்டும், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்படவில்லையெனில் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: