ஆவடி மாநகராட்சியில் ரூ.1.5 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்: முதல் தவணை ரூ.30 லட்சம் அமைச்சர் வழங்கினார்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் உள்ள விளிஞ்சியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த முதல் தவணையாக ₹30 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். ஆவடி மாநகராட்சி சார்பில் முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம், ஆவடி காமராஜர் நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி, பூஸ்டர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் 60வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் பூஸ்டர் ஊசியை செலுத்தி கொண்டனர்.

பின்னர், ஆவடி மாநகராட்சி  விளிஞ்சியம்பக்கம், பெரியார் நகர், பருத்திப்பட்டு, தண்டுரை, திருமுல்லைவாயல், சோழம்பேடு, மிட்டனமல்லி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு இலவச லேப்டாப்களை அமைச்சர் வழங்கினார். மேலும், ஆவடி, விளிஞ்சியம்பாக்கம் ஆரம்ப சுகாதார மையத்தை 30 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக தமிழக அரசு தரம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதற்காக, அரசு ₹1.5 கோடி நிதி ஒதுக்கியது. இதற்கு, முதல் தவணையாக அரசு சார்பில் ₹30 லட்சத்துக்கான காசோலையை, மாநகராட்சி ஆணையர் சரஸ்வதியிடம், ஆவடி அரசு மருத்துவமனைக்கு, தனியார் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட 100 போர்வைகளை, மருத்துவமனை தலைமை மருத்துவர் காவலனிடம் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கொரோனா கவனிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டார்.

அவருடன், கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி, ஆவடி மாநகராட்சி ஆணையர் எஸ்.சரஸ்வதி, சுகாதார துறை துணை இயக்குனர்கள் டாக்டர் செந்தில்குமார், டாக்டர் ஜவஹர்லால், மாநகராட்சி சுகாதார அலுவலர் அப்துல்ஜாபர், நகர்நல மருத்துவர் ஹசின், திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நடுகுத்தகை கே.ஜே.ரமேஷ், வக்கீல் கு.சேகர், ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

பூந்தமல்லி: பூந்தமல்லி பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொரோனா கவனிப்பு மற்றும் வகைப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 50 படுக்கைகளுடன், ஆக்சிஜன் சிலிண்டர் உள்பட உயர்ரக சிகிச்சை வசதிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளது.

இதில் உள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை ஆய்வகத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். கொரோனா சிகிச்சை அளிப்பது மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். பின்னர் அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து தேவையான படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் பிளான்ட், மருத்துவ வசதிகள் ஆகியவை சரியான அளவில் உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். தற்போது, மாவட்டத்தில் 564  படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 51 கொரோனா கவனிப்பு மையங்கள் மூலமாக 1622 படுக்கைகள் என 3924 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்றார். உடன், பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை.ஜெயக்குமார், பூந்தமல்லி மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: