கால்வாயில் ஆக்கிரமித்த ரூ.2 கோடி நிலம் மீட்பு: எதிர்ப்பு தெரிவித்த 10 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரத்தில், அடையாறு ஆற்றின் கால்வாய் ஒட்டிய பகுதியை ஆக்கிரமிப்பு செய்து நரசிம்ம ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டு இருந்தது. கடந்த 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு இருப்பதை, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, நீர்நிலை பகுதியில் கட்டப்பட்ட கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்தது. தொடர்ந்து அதிகாரிகள், கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க நேற்று முயன்றனர்.

இதை பார்த்ததும், அப்பகுதியை சேர்ந்த சிலர், அதிகாரிகளை கண்டித்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தாம்பரம் உதவி கமிஷனர் மற்றும் மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, எதிர்ப்பு தெரிவித்த 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். போலீசாரின் அதிரடி, நடவடிக்கையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இதற்கிடையில், பொக்லைன் இயந்திரம் மூலம் 21 சென்ட் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு இருந்த கோயில் மற்றும் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இந்த நிலத்தின் மதிப்பு ₹2 கோடி என வருவாய் துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: