மதுராந்தகம் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.15 லட்சம் பறிமுதல்

மதுராந்தகம், மார்ச் 17: மதுராந்தகம் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என நேற்றுமுன்தினம் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதனால் உடனடியாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் தகுந்த ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நேத்தப்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி சென்ற காரை சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு ெகாண்டு சென்று அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். தேர்தல் தேதி அறிவித்த உடன் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் பணம் பிடிபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: