ஊட்டியில் கோயில்கள் மூடல்

ஊட்டி, ஜன. 8:  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா 3வது அலை மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முதற்கட்டமாக இரவு நேர ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பொதுமக்கள் அதிகம் கூடாத வகையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் திறக்க தடை விதித்துள்ளது.

இதனை தொடர்ந்து, நேற்று நீலகிரி மாவட்டத்திலும், அனைத்து கோயில்களும் நேற்று மூடப்பட்டிருந்தன. ஊட்டியில் உள்ள முக்கிய கோயில்களான மாரியம்மன் கோயில், சீனிவாசபெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில், சுப்ரமணியார், காந்தல் காசிவிஷ்வநாதர், எல்க்ஹில் முருகன் கோயில் உட்பட அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன. கோயில்கள் மூடப்பட்டிருப்பதை அறியாமல் வந்திருந்த பக்தர்கள் கோயில்களுக்கு வெளியே நின்று கும்பிட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: