அவிநாசியில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு வரவேற்பு

அவிநாசி, ஜன.3:  துருக்கியில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் 3 தங்கம் வென்றுசாதனை படைத்த அவிநாசியை சேர்ந்த கல்லூரி மாணவனுக்கு, அவிநாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவிநாசி காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் வலுதூக்கும் வீரர், பயிற்சியாளர். இவரது மகன் பிரபு (23), கோவை தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். வலு தூக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர், தனது தந்தையிடம் பயிற்சி பெற்று, தொடர்ந்து 2016, 2017, 2019ல் பாரதியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில், தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல், 2019ல், தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும், 2019-2020ல் இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார்.

மேலும் 2019, 2020, 2021ல், மாநில அளவிலான, ஜூனியர் பிரிவு வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார். இதே ஆண்டுகளில், மாநில அளவிலான சீனியர் பிரிவு போட்டியிலும் தங்கம் வென்றார். இவர் தற்போது, துருக்கி இஸ்தான்புல் நகரில் 4 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, வலு தூக்கும் போட்டியில் 74வது பிரிவில் 737.5 கிலோ எடை தூக்கி 3 தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், துருக்கியில் இருந்து 3 தங்க பதக்கங்களை வென்று, சாதனை படைத்த அவிநாசிக்கு நேற்று வந்த பிரபுக்கு புதிய பேருந்து நிலையத்தில் அவிநாசி மக்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: