கண்ணமங்கலம் அருகே கொளத்தூரில் அனுமதியின்றி காளை விடும் திருவிழா விழாக்குழுவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு

கண்ணமங்கலம், ஜன.3: கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூரில் அனுமதி இன்றி காளைவிடும் திருவிழா நடத்திய விழாக்குழுவை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூரில் வருடம்தோறும் மார்கழி அமாவாசையன்று பாரம்பரிய முறைப்படி காளைவிடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று எந்தவித விளம்பரமும் இல்லாமல் எளிமையான முறையில் காளைவிடும் திருவிழா நடைபெற்றது. அப்போது, காளைகள் முட்டியதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவ்வழியாக பைக்கில் சென்ற தம்பதி மீது ஒரு காளை சீறிப்பாய்ந்தது. இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்த தம்பதி மற்றும் குழந்தை லேசான காயங்களுடன் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளைவிடும் திருவிழாவை தடுத்து நிறுத்தினர். மேலும், போட்டியில் பங்கேற்ற எந்த காளையின் உரிமையாளருக்கும் பரிசு வழங்கப்படவில்லை. இந்நிலையில் அனுமதி இல்லாமல் காளைவிடும் திருவிழா நடத்தியதாக விழாக்குழுவினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: