தொடர் விடுமுறை எதிரொலி சுற்றுலா தலங்களில் குவிந்த பயணிகள்

ஊட்டி, ஜன. 3: புத்தாண்டு மற்றும் வார விடுமுறை காரணமாக நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆங்கில புத்தாண்டு தினம் நேற்றுமுன்தினம் உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நீலகிரியில் இரண்டாவது ஆண்டாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் வழக்கமாக புத்தாண்டு நள்ளிரவில் நடக்கும் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஊட்டிக்கு வந்திருக்க சுற்றுலா பயணிகளும் ஓட்டல் அறைகளிேலயே முடங்கினர். புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

அதற்கேற்றார் போல் மேகமூட்டத்துடன் கூடிய குளு குளு காலநிலை நிலவியதால் அதனை அனுபவித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமான நேற்றும் சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் இருந்து படகு சவாாி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டியதால் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். இதேபோல் பைக்காரா, கேர்ன்ஹில் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புத்தாண்டு விடுமுறை மற்றும் பள்ளிகள் விடுமுறையும் நிறைவடைந்த நிலையில் மதியத்திற்கு பின் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்ப துவங்கினர். இதனால் மதியத்திற்கு பின் கூட்டம் குறைந்தது.

Related Stories: