மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்புக்குழு கூட்டம் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை அலுவலர்களுக்கு எம்பி ஜோதிமணி, கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தல்

கரூர், டிச. 30: கரூர் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், குழுவின் தலைவர் மற்றும் எம்பி ஜோதிமணி தலைமையிலும், குழுவின் செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டு, கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நன்றியை குழுவின் சார்பில் தெரிவித்துக் கொண்டார். இந்த கூட்டத்தில் மத்திய அரசினால் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் கேட்டறியப்பட்டது. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வரும் காலங்களில் அனைத்து பணிகளையும் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விவசாயம் சார்ந்த பணியில் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. வேளாண்மைத்துறை, பள்ளிக் கல்வித்துறை, குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் சுகாதாரத்துறை, மாநகராட்சி நிர்வாகம், பேரூராட்சித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துஐற மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டப்பணிகளையும் விரைவாக, நல்ல முறையில் தரமாக செய்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குநர் மந்திராச்சலம் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: