5,077 மெ.டன் ரசாயன உரம் இருப்பில் உள்ளது: குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கரூர், ஜூன் 28: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திடடங்களையும், வேளாண் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதுடன், விவசாயிகளின் குறைகளை அனைத்து துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இதுபோன்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், யூரியா 1524 மெட்ரிக் டன்னும், டிஏபி 851 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 900 மெட்ரிக் டன்னும், என்பிகே 1802 மெட்ரிக் டன்னும் என 5,077 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோடைக்காலங்களில் கால்நடைகளின் தீவன மேலாண்மையை பூர்த்தி செய்யும் வகையில் மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி, அசோலா பசுந்தீவன உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும், கறவை மாடுகளுக்கான கோடை கால பராமரிப்பு மேலாண்மை, கோடைக்காலங்களில் கறவை மாடுகளுக்கான குடிநீர் மேலாண்மை, தீவன மேலாண்மைக்கான திட்டமிடல், ஆடுகளுக்கான கோடைக்கால பராமரிப்பு மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். அந்த வகையில், விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 195 மனுக்கள் பெறப்பட்டது.

முன்னதாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வேளாண் இணை இயக்குநர் ரவிச்சந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநர் மணிமேகலை, நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத் துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் விளக்க கண்காட்சியும் இடம் பெற்றிருந்தன. இதனை குறைதீர் நாள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து விவசாயிகளும் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.

The post 5,077 மெ.டன் ரசாயன உரம் இருப்பில் உள்ளது: குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: