முப்படை தளபதி இறந்த துயரமான நேரத்தில் தமிழக அரசும், முதல்வரும் துரிதமாக செயல்பட்டனர் தி.மலையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி இந்தியா பெருமைப்படும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது

திருவண்ணாமலை, டிச.18: முப்படை தளபதி பிபின் ராவத் இறந்த துயரமான நேரத்தில், தமிழக அரசும், முதல்வரும் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டு, இந்தியாவே பெருமைப்படும் வகையில் தமிழகம் திகழ்ந்தது என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பின்னர், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும், அதை சந்திக்க பாஜ தயாராக உள்ளது. கட்சி வளர்ச்சிக்கும், மக்கள் பணியாற்றவும் உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது. எனவே, இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக கருதுகிறோம். தமிழகம் எப்போதுமே நாகரீமான அரசியல் உள்ள மாநிலம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்வதைத்தான் எதிர்க்கிறோம். அதைத்தான் ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம்.

பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட, தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும். அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சாதாரணமானது. அதிமுக மற்றும் பாமக தெரிவித்திருப்பது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள். அதைப்பற்றி நான் கருத்து சொல்வது நாகரீகமாக இருக்காது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் தர வேண்டும். அவதூறு பரப்பக்கூடாது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விரைவில் தெரிவிப்பேன். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் யானை இல்லாதது வருத்தமாக உள்ளது. எனவே, விரைவில் ேகாயிலுக்கு யானை வழங்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பக்தர்கள் பின்பற்றுவார்கள். 2 ஆண்டுகளாக கிரிவலம் செல்ல முடியாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

முப்படை தளபதி பிபின் ராவத் இறந்த சம்பவத்தின்போது, மீட்பு பணிகளில் தமிழக அரசு அதிகாரிகள், முதல்வர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அரசியலுக்காக பாஜ குற்றம் சுமத்தாது. முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அரசு அதிகாரிகள் ஆகியோர் துரிதமாக செயல்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்போது, உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், மாநில அரசுக்கு நூற்றுக்கு நூறு மார்க். முப்படை தளபதி பிபின் ராவத் இறந்த துயரமான நேரத்தில், தமிழகம் நடந்து கொண்டவிதம் இந்தியாவே பெருமைப்படுகிறது. முதல்வர் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை மூன்று நாட்கள் தமிழகம் இந்தியாவுக்கு பெருமை மிகு மாநிலமாக திழ்ந்திருக்கிறது. எனவே, அபாண்டமான பொய்யை, வதந்தியை நானும், எங்கள் கட்சியும் சொல்ல மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: