நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 பஞ்சாயத்துகளில் விரைவில் பாதாள சாக்கடை வசதி ஆலோசனை கூட்டத்தில் ராமலிங்கம் எம்எல்ஏ தகவல்

நாமக்கல், டிச.15: நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 பஞ்சாயத்து பகுதியில் விரைவில் பாதாள சாக்கடை வசதி செய்து கொடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் ராமலிங்கம் எம்எல்ஏ தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, நாமக்கல் தெற்கு நகர திமுக அலுவலகத்தில் வார்டு செயலாளர்கள் மற்றும் பொறுப்புகுழு உறுப்பினர்கள்இ இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர பொறுப்பாளர் ராணா.ஆனந்த் தலைமை வகித்து பேசினார். ஒன்றிய செயலாளரும், தேர்தல் பொறுப்பாளருமான பழனிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது: நாமக்கல் நகராட்சியுடன் 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும் அப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. 171 கி.மீ., தூரத்துக்கு அந்த பகுதியில் இன்னமும் மண் சாலைகள் தான் இருக்கிறது. அங்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் புதிய குடிநீர்திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அரசாணை பெறப்படும். கடந்த 6 மாத காலத்தில் நாமக்கல் நகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் நகரில் உள்ள 39 வார்டுகளிலும் திமுக வெற்றிபெற வேண்டும். அதற்காக கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து அதை செய்து கொடுப்பதில் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு ராமலிங்கம் எம்எல்ஏ பேசினார். கூட்டத்தில், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆனந்தன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, ஈஸ்வரன், புவனேஸ்வரன், அருட்செல்வன், நல்லி சரவணன், சரோஜா, செல்வகுமார், மனோகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஸ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கடல் அரசன் கார்த்தி, மணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: