சாலையில் உடைப்பால் பக்தர்கள் அவதி மது அருந்தும்போது தகராறு லாரி டிரைவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது

கரூர், டிச. 10: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள ரெங்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் கீர்த்தி என்கிற சரண்ராஜ்(32). லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை காட்டுப்பிள்ளையார் கோயில் அருகே, உறவினர் ராஜா என்பவருடன் மது அருந்திக் கொண்டிருந்தனர். நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்த பாலன், பாபு ஆகிய இருவரும் இவர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது சரண்ராஜூவுக்கும், பாலன், பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் அங்கிருந்து சரண்ராஜூம், ராஜாவும் பைக்கில் வீடு நோக்கி புறப்பட்டனர். இவர்கள் சின்னகாளிபாளையம் அருகே சென்ற போது, மற்றொரு பைக்கில் வந்து பாலனும், பாபுவும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது, பாபு, பீர் பாட்டிலால் சரண்ராஜின் தலையை தாக்கியதாகவும் பாலன், பைக்கில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரண்ராஜின் முகம், கை உள்ளிட்ட இடங்களில் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த நிகழ்வில் காயமடைந்த சரண்ராஜ், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து, பாபுவை கைது செய்து, தப்பியோடிய பாலனை தேடி வருகின்றனர்.

Related Stories: