அதிகரட்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கடைகளில் அதிரடி சோதனை

மஞ்சூர், டிச.9: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டிஸ்போசல் டம்ளர்கள் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிகரட்டி பேரூராட்சிகுட்பட்ட அதிகரட்டி, கிளிஞ்சாடா, கெந்தளா, குன்னக்கம்பை பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் ஓட்டல், பேக்கரி, டீக்கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் தலைமையில் நேற்று பேரூராட்சி ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் கூறியதாவது, பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளில் கேரி பேக்குகள், டிஸ்போசல் டம்ளர் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதும், விற்பனை செய்வதும் மற்றும் உபயோகிப்பதும் குற்றமாகும். பேரூராட்சியின் தடையை மீறி கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: