(செய்திஎண்03) தொடர் மழையால் 600 பள்ளி கட்டிடங்கள் சேதம் 140 கட்டிடங்களை இடிக்க முடிவு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, டிச.8: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர் மழையால் சேதமடைந்த 600 அரசு பள்ளி கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 140 கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 460 பள்ளி கட்டிடங்களை விரைந்து சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக மழை நீடித்தது. இடைவிடாது பெய்த மழையால், பயிர்கள் சேதமானது, சாலைகள் மற்றும் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன. சேத மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி தற்போது மாவட்டம் முழுவதும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடந்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கூட்டு ஆய்வு நடத்தினர். அதன்படி, மாவட்டத்தில் உள்ள 545 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள், 375 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 1,610 தொடக்கப்பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 600 அரசு பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதில், பெரும்பாலான பள்ளிகள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்கப்பள்ளிகள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், மாணவர்களின் எண்ணிக்கை காரணமாக பழைய கட்டிடங்களும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், தொடர்ந்து ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் நடைபெறாமல் பராமரிப்பின்றி இருந்தன. அதோடு, தொடர் மழையால் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பள்ளி கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சேதமடைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ள 600 பள்ளி கட்டிடங்களில், 140 கட்டிடங்கள் அதிக அளவில் சேதமடைந்திருக்கிறது. எனவே, அந்த கட்டிடங்களை இடிக்க முடிவு செய்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 460 பள்ளி கட்டிடங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்களில் மாணவர்களை அமர வைக்க வேண்டாம் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர் மழையால் பள்ளி சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்து, தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: