குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானை உலா வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

குன்னூர், டிச.7:  குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.நீலகிரி மாவட்டம் 65 சதவீதம்  வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் பசுமை திரும்பியுள்ளது. இதனால் யானைகளுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் எளிதில் கிடைக்கிறது. இந்த நிலையில் யானைகள் சமவெளி பகுதியில் இருந்து குன்னூர் கே.என்.ஆர் பகுதிக்கு படையெடுத்து வருகின்றன.

தற்போது ஒற்றை யானை மரப்பாலம் மற்றும் கே.என். ஆர்‌ பகுதியில் முகாமிட்டுள்ளது.  இவ்வாறு வரக்கூடிய யானைகள் சாலையில் சாதாரணமாக உலா வருகிறது. அவ்வாறு வரும் யானை கூட்டங்களை சுற்றுலா பயணிகள் போட்டோ மற்றும் செல்பி எடுத்து வருகிறார்கள். இது யானையை ஆத்திரமூட்டும் செயலாகும். இதனால் யானைகள் தாக்கு அபாயம் உள்ளது. எனவே மேட்டுப்பாளையம் சாலையில் உலா வரும் காட்டுயானைகளை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: