கண்ணமங்கலம் அருகே தனியார் பள்ளிக்கு சென்ற 70 மாணவர்கள் வீடு திரும்பாததால் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை கண்ணீர் விட்டு கதறி அழுத தாய்மார்கள்

*வண்ணாங்குளம் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்.

கண்ணமங்கலம், டிச.5: கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் நேற்று இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கமாக மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வருபவர்கள் நேற்று மாலை 6 மணியாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியில் குவிந்தனர்.

அங்கு பள்ளி மூடப்பட்டு காவலாளி மட்டும் இருந்ததால் பெற்றோர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். மாணவ, மாணவிகள் என்ன ஆனார்கள் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிள்ளைகளுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டிருக்குமோ அல்லது கடத்தி செல்லப்பட்டார்களா? என்ற அச்சத்தில் தாய்மார்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் பெற்றோர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 70 மாணவ, மாணவிகளை ஆய்வக பயிற்சிக்காக பள்ளி பஸ்சில் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே இரவு 7மணிக்கு வேலூரிலிருந்து பஸ் பள்ளியை வந்தடைந்தது. அதிலிருந்து இறங்கி வந்த மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் ஓடி சென்று கட்டியணைத்து அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், இனி பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் இதுபோன்ற தவறு ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகத்தை எச்சரிக்கை செய்தனர். இச்சம்பத்தால் நேற்று பள்ளி அருகே பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: