வந்தவாசி அருகே சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த தனியார் பள்ளி வேன் 9 மாணவர்கள், டிரைவர் படுகாயம்

வந்தவாசி, டிச.4: வந்தவாசி அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பள்ளி வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 மாணவர்கள், டிரைவர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா, வயலூர் கிராமம் அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளிக்கு சொந்தமான வேனில் ஏற்றிக்கொண்டு வருவது வழக்கம். அதேபோல், நேற்றும் பள்ளி வேன் டிரைவர் பாலகிருஷ்ணன்(45) என்பவர், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை, தென்தின்னலூர் ஆகிய கிராமங்களில் இருந்து 9 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு, பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.

பெலகாம்பூண்டி கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பள்ளி வேனை சாலையின் இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் வந்த மாணவர்கள் 9 பேர் மற்றும் டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

அப்போது, அவ்வழியாக வந்த மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வேனில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், அவ்வழியாக வந்த ஆட்டோ மற்றும் டூவீலர்களில் ஏற்றி, தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதும், அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தேசூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளி வேன் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: