பொன்னை அருகே கானாற்றில் மூழ்கி விவசாயி பலி

பொன்னை, டிச.2: பொன்னை அருகே கானாற்று வெள்ளத்தில் மூழ்கி முதியவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நரசிம்மரெட்டி(55). இவருக்கு சொந்தமான விவசாய நிலம், அதே பகுதியில் உள்ளது. அந்த நிலத்திற்கு அங்குள்ள கானாற்றை கடந்துதான் செல்ல வேண்டுமாம். பொன்னை ஏரிக்கு செல்லும் அந்த கானாற்றில் தொடர் மழை காரணமாக தற்போது வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை தனது நிலத்திற்கு சென்ற நரசிம்மரெட்டி, கானாற்றில் இறங்கி கடக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக பலியானார். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் சடலத்தை வெளியே எடுத்து விட்டு விஏஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விஏஓ பாபு அளித்த தகவலின்பேரில், பொன்னை எஸ்ஐ லெனின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பொன்னை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More