நாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா

நாமக்கல், ஏப்.23:நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த 223 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. 77 பேர் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,211 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் 27 இடங்களில் நேற்று போலீசார், பொதுமக்களை நிறுத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கினார்கள்.

சேந்தமங்கலம் அடுத்துள்ள காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில், வெட்டுக்காடு செல்லும் சாலையில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும்  மேற்பட்ட வியாபாரிகள், சந்தையில் கடை போட்டு காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.

காளப்பநாயக்கன்பட்டி, வெட்டுக்காடு, பேளுக்குறிச்சி, திருமலைபட்டி, நஞ்சுண்டாபுரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதும்கள் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க சந்தைக்கு வருவது வழக்கம். இப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை, நேரடியாக சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் காளப்பநாயக்கன்பட்டி வாரச்சந்தை கூடுவதற்கு தடை விதித்தது. நேற்று காலை வியாபாரிகள் வழக்கம்போல் காய்கறிகளுடன் விற்பனை செய்ய வந்தனர். அங்கு வந்த அதிகாரிகள், சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால், விவசாயிகள் வேறுவழியின்றி காய்கறிகளை எடுத்துக்கொண்டு திரும்பிச்சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ‘சந்தைக்கு தடை விதித்தால் காய்கறி விலை உயர்ந்து விடும். எனவே, உரிய நெறிமுறைகளை கடைபிடித்து சந்தை கூட அனுமதிக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

>