கிளினிக் நடத்திய போலி டாக்டர் தப்பியோட்டம் ஜமுனாமரத்தூரில் பரபரப்பு 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு

போளூர், ஏப்.23: ஜமுனாமரத்தூரில் கிளினிக் நடத்தி வரும் போலி டாக்டர் தலைமறைவானார். கிளினிக்குக்கு சீல் வைத்த போலீசார் போலி டாக்டரை தேடி வருகின்றனர். வண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் காந்தி நகரில் கிளினிக் நடத்தி வருபவர் பழனி(30). 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் யூடியூப் சேனலை பார்த்து, பல்வேறு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், மாவட்ட சுகாதார பணிகள் இணைஇயக்குநர் கண்ணகி தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் ராமநாதன், தாசில்தார் சங்கரன், வருவாய் ஆய்வாளர் அய்யாசாமி மற்றும் போலீசார் நேற்று காலை சம்பந்தப்பட்ட கிளினிக்கில் சோதனை நடத்த சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த போலி டாக்டர் பழனி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, கிளினிக்கில் காத்திருந்த நோயாளிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அங்கிருந்த ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். மேலும், சுகாதார பணிகள் இணை இயக்குனர் கண்ணகி அளித்த புகாரின்பேரில், ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள போலி டாக்டர் பழனியை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories:

>