மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ₹2 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, ஏப்.23: ஏலச்சீட்டு நடத்தி ₹2 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட நபர்கள் திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜப்திகாரியந்தல் கிராமத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:திருவண்ணாமலை முத்து விநாயகர் கோயில் தெருவில் செயல்பட்டு வரும் தனியார் சீட்டு நிறுவனத்தில், எங்கள் கிராமத்தை சேர்ந்த பலரும் மாதாந்திர ஏலச்சீட்டு பணம் கட்டி வந்தோம். இந்த சிட்ஸ் கம்பெனியை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரும், கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஒருவரும் நடத்தி வருகின்றனர்.அதிகபட்சம் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டு நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீட்டு பணம் மாதந்தோறும் தவறாமல் செலுத்தி முடித்துவிட்டோம். ஆனால், முதிர்ச்சியடைந்த தொகையை கொடுக்காமல் இருவரும் அலைக்கழிக்கின்றனர். எனவே, தனியார் சீட்டு நிறுவனத்துக்கு சென்று விசாரித்தோம். கடந்த 10 நாட்களாக சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களும் அங்கு இல்லை என தெரியவந்தது.

எனவே, சீட்டு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் எங்களைப் போல பலரும் ஏமாற்றப்பட்டுள்ளனர். சுமார் ₹2 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என தெரிகிறது.எனவே, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களுடைய சேமிப்பு பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.

Related Stories: