100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் திடீர் மறியல் பிடிஓ பேச்சுவார்த்தை கலசபாக்கம் அருகே பரபரப்பு

கலசபாக்கம், ஏப்.23: கலசபாக்கம் அருகே 100 நாள் வேலை வழங்கக்கோரி தொழிலாளர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏரி தூர்வாருதல், கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கலசபாக்கம் ஒன்றியம், காந்தப்பாளையம் ஊராட்சியிலும் 100 நாள் வேலை திட்டத்தின் பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், காந்தாப்பாளையம் ஊராட்சி மதுரா சீனந்தல் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக வேலை வழங்கவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட தொழிலாளர்கள் நேற்று காலை போளூர்-மேல்சோழங்குப்பம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கடலாடி இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். இதையடுத்து, பிடிஓ விஜயலட்சுமி விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிடிஓ, சீனந்தல் பகுதியை சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்குவதாக உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அங்கு அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>