சேத்துப்பட்டில் கொரோனா தடுக்க ஆலோசனை கூட்டம் தாசில்தார் தலைமையில் நடந்தது

சேத்துப்பட்டு, ஏப்.20: சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுக்க தாசில்தார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் தாசில்தார் பூங்காவனம் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடச்சொல்லி வலியுறுத்துகிறது. இதனால், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். சேத்துப்பட்டு வட்டாரத்தில் தச்சாம்பாடி, கொம்மனந்தல், வடமாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்களை அழைத்து வந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து வியாபாரிகளும் முகக்கவசம் அணிந்து, வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மண்டல துணை தாசில்தார் கோமதி, தலைமையிடத்து துணை தாசில்தார் காஜா உட்பட அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: