பெரம்பலூர் கலெக்டர் தகவல் கொரோனா நிவாரணம் ரூ.10 ஆயிரம் வழங்க கோரி நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஏப்.20: நாட்டுப்புற கலைஞர்கள், பதிவு பெற்ற, பதிவு பெறாத அனைத்து மூத்த கலைஞர்களுக்கும் கொரோனா நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க கோரி, நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் வசிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள் பெரம்பலூர் துறைமங்கலம், தீரன்நகர் பகுதியில் தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் என்ற பெயரில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் நேற்று சங்கத்தின் பெரம்பலுர் மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமையில், மாவட்ட செயலாளர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பெரியசாமி, அவைத்தலைவர் சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சூசை முத்து உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்டோருடன் திரண்டு வந்து, கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா நுழைவு வாயில் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நாட்டுப்புற கலைஞர்கள் பதிவு பெற்ற, பதிவு பெறாத, அனைத்து மூத்த கலைஞர்களுக்கும் கொரோனா நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கு முழுமையாக நிவாரண தொகை வழங்கப்படாததால் இந்த ஆண்டு அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரிய அட்டை, அடையாள அட்டை, விஏஓ சான்று தடையின்றி கிடைக்க நடவடிக்கை வேண்டும். நாட்டுப்புற கலைஞர்கள், பதிவு பெற்ற, பதிவுபெறாத மூத்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் உள்ள சிரமங்களை தவிர்த்திட வேண்டும். கொரோனா காலங்களில் திருவிழா, பண்டிகை காலம், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும். அரசு விளம்பர நிகழ்ச்சிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்திற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More