திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

செய்யாறு, ஏப்.19: திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நவரை பட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் அறுவடை நடந்து வருகிறது. இதில் செங்கம், திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் தனியார் மண்டிகளில் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். அதில், கிலோவுக்கு ₹12 வரை விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

இதுதவிர, போளூர், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய தாலுகாக்களில் 50 சதவீதம் நெல் மூட்டைகள் மார்க்கெட் கமிட்டிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அதிகபட்சம் கிலோவுக்கு ₹14 வரை கிடைக்கிறது. மேலும், ஏக்கருக்கு சராசரியாக 30 மூட்டைகள் நெல் உற்பத்தியாகும் நிலையில் விவசாயிகளுக்கு ₹30 ஆயிரம் கிடைக்கிறது. ஆனால், ஒரு ஏக்கர் சாகுபடி செலவு ₹28 ஆயிரம் ஆகிறது. இதனால் ₹2 ஆயிரம்தான் லாபம் வருகிறது. 4 மாதங்கள் குடும்பத்தினர் அனைவரும் கொடுத்த உழைப்புக்கு விவசாயிகளுக்கு ₹2 ஆயிரம் லாபம் என்பது போதாது.

மேலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு ₹19.58 என 75 கிலோ நெல் மூட்டைக்கு சுமார் ₹1,455 பெறுவதற்கு, நெல் மூட்டைகளை விற்பனை செய்ய மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. இருப்பினும், ஒரு ஏக்கரில் விளையும் 30 நெல் மூட்டைகளுக்கு ₹43 ஆயிரம் கிடைப்பதால் விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களை நாடுகின்றனர். இந்நிலையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை, போதுமான நெல்தூற்றும் மெஷின்கள் இல்லாதது, எடை மெஷின்கள் இல்லாதது போன்ற காரணங்களால் ஒரு நாளைக்கு சுமார் 300 முதல் 400 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்களது நெல்மூட்டைகளை விற்க மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் நார்த்தாம்பூண்டி, கார்குனம், கீழபென்னாத்தூர், அணுக்குமலை, வெறையூர், தண்டராம்பட்டு, புதுப்பாளையம், குண்ணத்தூர், அத்திமூர், எலத்தூர், நம்பேடு, இந்திரவனம், மழையூர், தச்சூர், தவசி, நாவல்பாக்கம், பாராசூர், மேல்நெமிலி, புரிசை, வளர்புரம், வடஇலப்பை, அரியூர், பிரம்மதேசம், நாட்டேரி, சித்தன்னக்கால், தூசி, சுருட்டல், வெங்களத்தூர், பெருங்கட்டுர், கீழ்நெல்லி என 30 நிலையங்களில் எடைபோடாமல் சுமார் ஒரு லட்சம் நெல்மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.

மேலும், நேரடி கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் நெல் மூட்டைகளை வெளியே வைக்கும் நிலை உள்ளது. அந்த நெல் மூட்டைகள் மழையிலும், வெயிலிலும் வீணாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அதேபோல், கரியமங்களம், நாயுடுமங்களம், எரையூர், வடமாதிமங்கலம், மண்டகுளத்தூர், அணியாலை, தேவிகாபுரம், ராந்தம், பெரணமல்லூர், மருதாடு, தேசூர், தெள்ளார், சேனல், குவளவேடு, கோவிலூர், அனப்பத்தூர், திருமணி, மேல்சீசமங்கலம், படவேடு, சந்தவாசல், களம்பூர், கண்ணமங்கலம், சுனைபட்டு, தென்னம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>