வந்தவாசி அருகே பரபரப்பு...ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மூதாட்டி சடலம் புதைக்க எதிர்ப்பு கோஷ்டி மோதலில் 62 பேர் மீது வழக்கு

வந்தவாசி, ஏப்.19: வந்தவாசி அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மூதாட்டி சடலம் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மங்கலம் மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு(54). இவரது குடும்பத்திற்கும் அதே கிராமத்தை சேர்ந்த மேத்தா ரமேஷ்(48) என்பவரது குடும்பத்திற்கும் தேர்தல் முன்விரோதம் இருந்துள்ளது. தற்போது ஊராட்சி மன்ற தலைவராக மேத்தா ரமேஷின் மனைவி கதிஜா உள்ளார்.

இந்நிலையில், சேட்டுவின் சித்தி அஞ்சலாட்சி(60) என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த 14ம் தேதி இறந்தார். இவரது குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இதனால் சடலத்தை சுடுகாட்டில் புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், சடலத்தை புதைக்க ஊராட்சி தலைவரின் கணவர் மேத்தா ரமேஷ் இடையூறு செய்வதாக கூறி, கிராம விஏஓவிடம் சேட்டு தரப்பினர் புகார் செய்தாக கூறப்படுகிறது. அதன்பேரில் கடந்த 15ம் தேதி விஏஓ அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது.

அங்கு மேத்தா ரமேஷ் உள்ளிட்ட 12 பேர் வந்தனர். பின்னர், சடலத்தை புதைப்பதில் தனக்கு உடன்பாடில்லை எனவும், ஊரில் முக்கிய நிர்வாகிகள் 4 பேர் உள்ளனர், அவர்கள் விரும்பினால் சடலத்தை புதைக்கலாம் என கூறி விட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினாராம். அப்போது, அங்கு வந்த சேட்டு மற்றும் ஆதரவாளர்களான சரீப், ரகமத்துலா, பழனி, லோகு, குபேந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கும், மேத்தா ரமேஷ், அவரது மனைவி கதிஜா, சகோதரர் அருண்பிரகாஷ், அசோக்குமார் உள்ளிட்டோருக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இருவரும் கீழ்கொடுங்காலூர் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 62 பேர் மீது போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் தேடிவருகின்றனர்.

Related Stories: