பலத்த காற்றுடன் திடீர் மழை: காஞ்சி மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம், ஏப்.15: காஞ்சிபுரத்தில் திடீரென சூறாவளிக் காற்றுடன் பெய்த திடீர் மழையால் ஓரளவு வெப்பம் தணிந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்தது. கோடையில் வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரக் காலம் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் புழுக்கத்தால் தவித்தனர். இந்நிலையில் வழக்கத்தைவிட நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. மாலை 3 மணியளவில், திடீரென பலத்த காற்று வீசியது. தொடர்ந்து சுமார் அரைமணி நேரம் பெய்த மழையால் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் உள்பட பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் ஓரளவு தணிந்தாலும், கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பலத்த மழையை எதிர்நோக்கி பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

 தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை சிறிது நேரம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை காரணமாக, தாம்பரம் அடுத்த இரும்புலியூர் மற்றும் இரும்புலியூர் பகுதியிலிருந்து டி.டி.கே நகர் செல்லும் வழியில், தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையின் மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சாலை முழுவதும் மழைநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நின்றது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகனயோட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மழைநீர் செல்ல முறையான திட்டமிடல் இல்லாமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் அமைத்ததால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதுபோன்று சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதுடன், குடியிருப்பு பகுதிகளின் உள்ளேயும் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியமாக இருந்து வருகின்றனர் என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: