திருப்பூரில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இடையே டவுன் பஸ் இயக்க கோரி பயணிகள் சாலை மறியல்

திருப்பூர், ஏப். 13: திருப்பூரில் தற்காலிக பஸ் நிலையங்களுக்கு இடையே பஸ்களை இயக்க வலியுறுத்தி பயணிகள் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குடிநீர், நவீன பஸ் ஸ்டாண்ட், பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம், சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் ஆலை, சந்தைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து, நவீன பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியும், அருகில் உள்ள முத்துப்புதூர் பள்ளிக் கட்டிடத்தை அகற்றிவிட்டு, அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டதால், யுனிவர்சல் தியேட்டர் அருகிலும், மாவட்ட கலெக்டர் அலுவலக முகப்பு பகுதியிலும், கோவில்வழி பகுதியிலும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் கோவில்வழி பகுதியிலிருந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல போதுமான டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வெளியூரில் இருந்து திருப்பூர் வந்த பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நல்லூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் வெளியூரில் இருந்து வருபவர்களை கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டு செல்கின்றனர்.

ஆனால், கோவில்வழியில் இருந்து திருப்பூர் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு செல்ல போதுமான டவுன் பஸ்கள் இல்லை என தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போக்குவரத்து கழகம் சார்பில் தற்காலிக பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பயணிகள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories:

>