திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி விழிப்புணர்வு அதிகரிக்க ஏற்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலோசனை

திருவண்ணாமலை, ஏப்.13: திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசய்வு நடத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 20,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 19,485 பேர் குணமடைந்துள்ளனர். 288 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, மருத்துவமனைகளில் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நாளொன்றுக்கு சராசரியாக 70 பேருக்கும் மேல் அதிகமாக தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதேபோல், தடுப்பூசி முகாம்கள் மூலம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது, அதில், டிஆர்ஓ முத்துகுமாரசாமி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் அஜிதா மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், படுக்கை வசதிகளை அதிகரித்தல், சிறப்பு வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகளை தயார்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், கொரோனா தொற்று பாதித்த நபர்கள் வசிக்கும் பகுதிகளில், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தனி நபர் விழிப்புணர்வு அதிகரிக்கவும் உள்ளாட்சி பணியாளர்களுடன் இணைந்து சுகாதாரத்துறையினர் பணியாற்ற வேண்டும் என்றார். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 10 அரசு மருத்துவமனைகள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

Related Stories: