நெல்லை மாவட்டத்தில் 6,011 பேர் மீது வழக்கு கொரோனா விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எஸ்.பி. மணிவண்ணன் எச்சரிக்கை

நெல்லை, ஏப். 12: நெல்லையில் அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை மீறி முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாத 6,011 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 3 நாட்களில் ரூ.12,33,900 வீதம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் அரசின் விதிமுறைகளை மீறி நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் செல்வோர், வாகனம் ஓட்டும்போது முகக்கவசம் அணியாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு  எஸ்.பி. மணிவண்ணன் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 இதையடுத்து கடந்த 8ம் தேதி முதல் நேற்று முன்தினம் (10ம் தேதி) வரை நெல்லை மாவட்டத்தில் ஆய்வுமேற்கொண்ட போலீசார் மாஸ்க் அணியாமல் சென்ற 5,920 பேர் மீதும் சமூக இடைவெளியை பின்பற்றாத 91 பேர் மீது வழக்கு பதிந்தனர். இதற்காக அவர்களிடமிருந்து ரூ.12 லட்சத்து 33 ஆயிரத்து 900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பின்னர் நெல்லை எஸ்பி மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘ கொரோனா 2வது கட்ட அலை பரவலை தடுக்க ஏதுவாக அனைவரும் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார்.

Related Stories: