டோக்கன் வழங்கியும் கொள்முதல் செய்யாததை கண்டித்து நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

மதுராந்தகம்:  மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே ஈசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிர் செய்துள்ளனர். தற்போது, அவை அறுவடை செய்யப்படுகின்றன. இதனால், அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய ஈசூர் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கு, அரசு அதிகாரிகள், அப்பகுதியில் விரைவில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க உள்ளது என தெரிவித்தனர். மேலும், வரிசைப்படி விவசாயிகள் தங்களது நெல்லை, கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவர டோக்கன்கள் வழங்கினர். இதனால, அப்பகுதி நெல் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யவில்லை என கூறப்படுகிறது. கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

 

இந்நிலையில், டோக்கன் வழங்கி சுமார் ஒரு மாதமாகியும் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, படாளம் - திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையில் நெல்லை சாலையில் கொட்டி, விவசாயிகள் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதித்தது.தகவலறிந்து படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: