ஏ.இ.பி.சி. சார்பில் குஜராத் நூற்பாலை சங்கத்தினருடன் கலந்துரையாடல்

திருப்பூர்,ஏப்.9:ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில் குஜராத் நூற்பாலை சங்கத்தினருடன் கலந்துரையாடல் ஆன்லைனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், இந்திய ஜவுளி கூட்டமைப்பு (சிட்டி) தலைவர் ராஜ்குமார், குஜராத் நுாற்பாலை சங்க தலைவர் சவுரின்பரிக், துணை தலைவர் ரிப்பிள் படேல், டெக்ஸ்புரோசில் தலைவர் மனோஜ்குமார் பட்டோடியா உட்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது: திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சீரான விலைக்கு, தடையின்றி நூல் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. குஜராத் நூற்பாலை சங்கத்தினருடன் தற்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் நூலில் 30 முதல் 40 சதவீதத்தை திருப்பூர் கொள்முதல் செய்கிறது. ஆகவே குஜராத் நூற்பாலைகள் திருப்பூர் சந்தையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நூல் விலையை கிலோவுக்கு 15 முதல் 20 ரூபாய் வரை குறைக்கவேண்டும் என சிட்டி தலைவர் ராஜ்குமார் பேசினார். திருப்பூரில் குஜராத் நூற்பாலைகளின் வர்த்தக மையம் அமைவதற்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து தர, ஏ.இ.பி.சி., தயாராக உள்ளது. நூல் ஏற்றுமதி குறைந்து வருகிறது. பின்னலாடை துறையினர் நூல் கொள்முதலில் அவசரம் காட்டக்கூடாது.

விரைவில் நூல் விலை கட்டுக்குள் வரும். குஜராத்தில் கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை நூல் விலை குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தடையின்றி நூல் வழங்க குஜராத் நூற்பாலைகள் தயாராக உள்ளன. கோவை - ராஜ்கோட் சரக்கு ரயில் இயங்குகிறது. எனவே நூல் கொண்டு வருவதில் போக்குவரத்து தடை ஏதுமில்லை என அம்மாநில நுாற்பாலை சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தங்கள் மாநில நூற்பாலை துறையினரை திருப்பூருக்கு நேரில் அழைத்து வருவதாகவும், அப்போது நேரடி கலந்துரையாடல் நடத்தலாம் எனவும் அச்சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இவ்வாறு சக்திவேல் கூறினார்.

Related Stories:

>