காலில் வளையமிட்ட ஐரோப்பிய பறவைகள் குமரியில் கண்டுபிடிப்பு

நாகர்கோவில், ஏப்.8 : ஐரோப்பிய நாடுகளில் இருந்து மணக்குடி பறவைகள் பாதுகாப்பு பகுதிக்கு காலில் வளையமிட்ட இரு பறவைகள் இவ்வாண்டு இடப்பெயர்ச்சி வாயிலாக வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை ஆர்ட்டிக் பனிப்பகுதிகளில் இருக்கின்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து பறவைகள் இந்தியாவுக்கு வருகின்றன. குமரி மாவட்டத்தின் மணக்குடி பறவைகள் பாதுகாப்பு பகுதியான புத்தளம் உப்பளம், சாமிதோப்பு உப்பளம் ஆகியவற்றில் இப்பறவைகள் வந்து மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றன.

ஐரோப்பிய நாடுகளை பனிக்காலத்தில் கடுங்குளிர் வாட்டுகின்றபோது, உணவுக்காக திண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையில் மிதமான தட்பவெட்ப காலநிலை நிலவுகின்ற இந்திய பகுதிகளுக்கு பறவைகள் படையெடுக்கின்றன. மணக்குடி உப்பள பகுதிகளில் பறவைகளுக்குத் தேவையான உணவு, உறைவிடம், பாதுகாப்பு கிடைப்பதால் பறவைகள் இப்பகுதிகளில் முகாமிடுகின்றன.

செங்கால் உள்ளான், ஆலா ஆகிய பறவைகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்துள்ளன. இந்த பறவைகளின் கால்களில் வளையமிடப்பட்டிருந்தன.

இந்த பறவைகள் தொடர்பாக பறவைகள் ஆர்வலர் மற்றும் ஐயூசிஎன் எனப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்க உறுப்பினர் டேவிட்சன் சற்குணம் கூறுகையில், ‘ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்துள்ள இந்த பறவைகள் சுவாமிதோப்பு உப்பளத்தில் கண்டறியப்பட்டன. இவற்றின் கால்களில் வளையங்கள் உள்ளபோதும் தகவல்கள் தெளிவாக தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகளில் பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் துவங்கியதும் இப்பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிடும். வெளிநாடுகளில் இருந்து நமது பகுதிக்கு அழையா விருந்தாளிகளாக வருகின்ற பறவைகளை பாதுகாப்பது நமது கடமை. அவற்றின் வாழிடங்களை மாசுபடாமல் பாதுகாப்பது, வேட்டையாடுவதை தடுப்பது, பறவைகளை அச்சுறுத்தாமல் இருப்பது போன்றவற்றை கண்காணித்து பறவைகளைப் பாதுகாக்க வேண்டும். வனத்துறை, மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை பொதுமக்கள் இணைந்து பறவை பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.

பறவைகள் இடம்பெயரும்போது அவற்றின் சொந்த நாடுகளில் கால் கழுத்து இறகு ஆகியவற்றில் வளையமிடுவது அப்பறவைகள் குறித்த ஆய்வுகளை செய்வதாகும். எந்த பகுதி வழியாக, எந்த நாடுகளுக்கு பறவைகள் செல்கின்றன, செல்கின்ற நாட்டின் உணவு வகைகள், நீரின்தன்மை, தட்பவெப்பநிலை, பாதுகாப்பு, கண்காணிப்பு, எவ்வளவு நாட்கள் தங்குகின்றன? மீண்டும் அந்த நாட்டிற்கு அதே இடத்திற்கு செல்கின்றனவா? பல ஆயிரம் கி.மீட்டர் பறந்து தடைகளை தாண்டி சொந்த நாட்டிற்கு பத்திரமாக திரும்பி வருகின்றனவா? என்பது போன்ற ஆய்வுகளை செய்ய வளையமிடுதல் பேருதவியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: