ஊட்டி, ஏப். 8: நீலகிரியில் விளைய கூடிய பணப்பயிர்களான குறுமிளகு, இஞ்சி போன்றவற்றை சந்தை படுத்த அரசு சார்பில் ஒருங்கிணைந்த விற்பனை மையம் ஏற்படுத்த வேண்டும் என சிறு ,குறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கேரளா மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஏலக்காய், குறுமிளகு, கிராம்பு, இஞ்சி, காபி உள்ளிட்ட பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தேயிலை பயிர்கள் அதிகம் உள்ள போதும், தேயிலைக்கு தற்போது நிலையான விலை இல்லாத நிலையில் ேதயிலை செடிகளுக்கு இடையே ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஊடுபயிராக குறுமிளகு சாகுபடியும் நடைபெற்று வருகிறது. மேலும் தனியாகவும் பல ஏக்கர் பரப்பளவில் குருமிளகு, இஞ்சி, கிராம்பு போன்றவை பயிரிடப்படுகின்றன.