பேரூராட்சி ஊழியர்களை கண்டித்து சாலை மறியல் வந்தவாசி அருகே பரபரப்பு திமுக விளம்பர ஸ்டிக்கர் கிழிப்பு

வந்தவாசி, மார்ச் 29: வந்தவாசி அருகே திமுக விளம்பர ஸ்டிக்கரை கிழித்த பேரூராட்சி ஊழியர்களை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு, பாமக சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு திமுகவினர், `ஸ்டாலின்தான் வாராறு விடியல் தர போராறு' என்ற வாசகங்களுடன் சிறிய அளவிலான ஸ்டிக்கர்களை அச்சடித்து, அங்குள்ள பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர். அந்த ஸ்டிக்கர்களை தேசூர் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து திமுக நகர செயலாளர் இ.ஜெகன் தலைமையில், மாவட்ட பிரதிநிதிகள் ஏ.செல்வம், மனோகரன், காங்கிரஸ் நகர தலைவர் ராஜபாண்டியன், விசிக நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் பலர், அங்குள்ள தேரடி பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் தணிகைவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாமகவின் தேர்தல் விளம்பர போஸ்டர்களை அகற்றாமல், திமுகவின் ஸ்டிக்கர்களை மட்டுமே பேரூராட்சி நிர்வாகத்தினர் கிழித்து அகற்றியுள்ளனர், இது எப்படி நியாயம் என கேள்வி எழுப்பினர். அவர்களை சமரம் செய்த போலீசார், பாமக போஸ்டர்களையும் அகற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: