நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் பூங்கா குப்பை கிடங்கில் நீதிபதி திடீர் ஆய்வு': பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு

கூடுவாஞ்சேரி, மார்ச் 18: நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி 18வது வார்டில் உள்ள சிறுவர் பூங்காவில் இயங்கும் குப்பை கிடங்கை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, அப்பகுதிக்கு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். கூடுவாஞ்சேரி அருகே நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் 18வது வார்டு வள்ளலார் நகரில், டிடிசிபி அப்ரூவல் அனுமதி பெற்ற சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில், கடந்த 9 ஆண்டுகளாக குப்பை கிடங்கு இயங்குகிறது. இதில், பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து, மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.

குப்பைகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் தாங்க முடியாமல் 18வது வார்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த குப்பை கிடங்கை அகற்ற கோரி, 18வது வார்டு திமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் ஜெ.குமரவேல், கடந்த 2019 நவம்பர் 29ம் தேதி சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள், குப்பை கிடங்கை 6 வாரங்களுக்குள் அகற்றும்படி கடந்த 2020 மார்ச் 5ம் தேதி தீர்ப்பளித்தனர். இதற்கு, பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் மெத்தனம் காட்டி வந்தனர். இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பை கிடங்கு அகற்றப்பட்டதா என விசாரிக்க பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி நேற்று அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். இதையறிந்ததும், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

அப்போது, எங்கள் பகுதிக்கு வந்து குப்பைகளை எடுத்து செல்வது கிடையாது. குடிநீர் சரிவர வழங்குவது கிடையாது. இப்பகுதியில் இயங்கும் குப்பை கிடங்கை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அகற்றவில்லை. இதனால், துர்நாற்றம் தாங்க முடியாமல் கடும் அவதிப்படுகிறோம். குடிநீர் ஆதாரமும் அடியோடு கேட்டுவிட்டது என சரமாரியாக புகார் கூறினர். பின்னர், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நீதிபதி நடந்து சென்று, கிணற்றில் உள்ள குடிநீரை ஆய்வு செய்தார். அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசனை, அழைத்து இந்த பகுதியில் இயங்கும் குப்பை கிடங்கை ஒரு மாதத்தில் அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும். குப்பை கிடங்கை அகற்றியதும், அதே இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க உத்தரவிட்டார். இதேபோல், பேரூராட்சி 6வது வார்டில் அமைந்துள்ள ஏரி பகுதியில் குப்பை கொட்டப்படுகிறதா? என நீதிபதி ஆய்வு செய்தார். அப்போது, கலெக்டர் ஜான்லூயிஸ், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: