ஓட்டு எண்ணிக்கைக்கு சில மணி நேரத்துக்கு முன் காங். மாஜி எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்: மத்திய பிரதேச இடைத்தேர்தலில் பரபரப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் டாடியா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சில மணி நேரங்களுக்கு முன் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேந்திர பாரதி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் டாடியா தொகுதியில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக மூத்த தலைவர் நரோட்டம் மிஸ்ராவை 7,700க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேந்திர பாரதி வெற்றி பெற்றார்.

பின்னர், மோசடி வழக்கு ஒன்றில் டெல்லி நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியான டாடியா தொகுதிக்கு கடந்த ஜூலை 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, 71.44 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கன்ஷ்யாம் சிங் போட்டியிட்டார். பாஜக சார்பில் அசுதோஷ் திவாரி உட்பட 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க இருந்த நிலையில், நேற்றிரவு ராஜேந்திர பாரதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை குறித்து கூறிய ராஜேந்திர பாரதி, ‘இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை என்னை எந்த வகையிலும் பாதிக்காது. பாஜக மூத்த தலைவர் நரோட்டம் மிஸ்ராவின் சதியால் தான் இந்த ஒட்டுமொத்த சம்பவமும் நடந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங், நரோட்டம் மிஸ்ராவுடன் ரகசிய கூட்டு வைத்துக்கொண்டு இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இந்த தவறான முடிவுக்கு வரும் 2028ம் ஆண்டு மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அடுத்த தேர்தலில் எனது பலத்தை நிரூபிப்பேன்’ என்று தெரிவித்தார்.

Related Stories: