புதுடெல்லி: சட்டக் கொள்கை ஆய்வு அமைப்பான ‘விதி’ சார்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயன் பேசுகையில், ‘‘நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியமின் கடந்த 3 அறிவிப்புகளிலும் எந்த விதமான காரணங்களும் குறிப்பிடப்படவில்லை. இது வெளிப்படைத்தன்மை என்ற கொள்கையிலிருந்து பின்வாங்கும் நடவடிக்கையா? பதவி உயர்வுக்கான காரணங்களை வெளிப்படுத்தாதது தகுதியற்ற நபர்கள் நீதித்துறைக்குள் நுழைய வழிவகுக்கிறது. மகத்தான பணிகளை செய்த பல நீதிபதிகளுக்கு கொலீஜியம் அமைப்பு உண்மையில் அநீதி இழைக்கிறது.
இவ்வாறு காரணங்களை மறைப்பதால், குறிப்பிட்ட சமூகத்தினரை எறும்புகள் என விமர்சிப்பவர்களும், அரசியலமைப்புக்கு முரணான, எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் நபர்களும் நீதித்துறைக்குள் நுழைவதற்கு நாம் வழிவகுக்கிறோம். அத்தகைய நபர்கள் நுழைவதை தடுக்க இதுதொடர்பான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். பதவி நியமனத்திற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2024ல் விஎச்பி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற மாஜி நீதிபதி ஒருவர், பெரும்பான்மையினரின் விருப்பப்படியே இந்தியா செயல்படும் என்றும், குறிப்பிட்ட சமூக மக்களை எறும்புகள் என கூறியது சர்ச்சையானது. சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சி என விமர்சித்ததை தொடர்ந்து சமூக ஊடகங்கள் மூலம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என இளைஞர்களால் தொடங்கப்பட்டு டெல்லியில் பெரும் போராட்டம் மூலம் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
