புதுடெல்லி: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் மோடியை அவதூறாக விமர்சனம் செய்த 15 வயது சிறுமி மீது வழக்கு தொடர்ந்ததால் சர்ச்சை வெடித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தின் நிறைவாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி ஒரு வாரம் ஆன நிலையில், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்புக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையிலான புதிய மோதல் புள்ளியாக மாறியுள்ளன.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடங்கிய மாணவர் போராட்டம் பின்னர் மகாராஷ்டிரா, பீகார், குஜராத், அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா வரை பரவிய போது காவல்துறையினர் அதிகமாக பலப்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டும் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போதைக்கு மாணவர்கள் மீது எவ்விதக் கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், போராட்டங்கள் தொடர்பான அனைத்து மின்னணு ஆதாரங்களையும் பாதுகாத்து வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது; அத்துடன், தன்னிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்குத் தகுதியானவை என்று குறிப்பிட்டது. மேலும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் குற்றப் பின்னணி இல்லாதவர்களை விடுவிக்குமாறும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி டெல்லி ஜந்தர்மந்தர் போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான முழக்கங்களை எழுப்பியதற்காக 15 வயதுடைய சிறுமி மீது நொய்டாவின் எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு டெல்லியின் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது அங்கேயே விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள ஒரு உயர் பதவியின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையிலும், விரோத உணர்வைத் தூண்டும் மற்றும் பொது அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடனும் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளை அந்தச் சிறுமி தெரிவித்ததாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 352, 353(1) மற்றும் 356(1)-ன் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர் நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனது தாயுடன் வசித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜந்தர் மந்தர் போராட்டம் நடந்ததிலிருந்து அவரை அங்கு காணவில்லை என்றும், அந்த வீடு பூட்டியே இருப்பதாகவும் குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்புப் பணியாளர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதற்கிடையில், அப்போராட்டத்தை ஏற்பாடு செய்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் சிறுமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் கூறுகையில்,’ ஆட்சேபனைக்குரிய அல்லது இழிவான மொழியை ஒருபோதும் ஆதரிக்க முடியாது.
ஆனால், அத்தகைய கருத்துகளுக்காகக் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது கருத்துச் சுதந்திரத்தின் மீது ஒருவித அச்சத்தை அல்லது முடக்கத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளை நாடுவதற்குப் பதிலாக, அவதூறு தொடர்பான சிவில் நடவடிக்கைகளையே மேற்கொள்ள வேண்டும்’ என்றார். இதற்கிடையே பிரதமர் மோடி தன்னை அவதூறாக பேசியவர்களை மன்னிக்க விரும்புவதாக வீடியோ வெளியிட்டார். அதை தொடர்ந்து 15 வயது சிறுமியும் பகிரங்க மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். இதுவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
போராட்டக்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கடுமையாக எதிர்த்து உள்ளார். அவர் கூறுகையில்,’ அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக ஒரு பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை நான் இப்போதுதான் பார்த்தேன். பல ஆண்டுகளாக இணையத்தில் பெண்களுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி வரும் பாஜ ஐடி பிரிவினர் மீது எப்போது வழக்குகள் பதிவு செய்யப்படும்? பிரதமர் மோடி தங்களைப் பின்தொடர்கிறார் என்பதை அவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பில் பெருமையுடன் குறிப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இத்தனை ஆண்டுகளாகப் பெண்களை மிக மோசமான முறையில் தரக்குறைவாகப் பேசிய ஐடி பிரிவு உறுப்பினர்கள் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்படுமா? அரசியல் தலைவர்களுக்கும் இதே அளவுகோல்கள் பின்பற்றப்படுகின்றனவா? இது பாஜ ஐடி பிரிவோடு மட்டும் நின்றுவிடவில்லை. பாஜ எம்.பி. ரமேஷ் பிதுரியை எடுத்துக்கொள்வோம். சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக அவர் பயன்படுத்திய மொழிநடை அனைவரின் நினைவிலும் உள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேமராமேன் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசுவது போன்ற வீடியோ ஒன்றும் உள்ளது.
அப்படியானால் இளைஞர்களுக்கும் பாஜ தலைவர்களுக்கும் எனத் தனித்தனி சட்டங்களின் கீழ் நாடு நிர்வகிக்கப்படுகிறதா?. வசவுச் சொற்களைப் பயன்படுத்துவது குற்றமல்ல. அது ஒரு தவறான செயலாக இருக்கலாம், சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவுரை கூறலாம். ஆனால் ஏன் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இப்படியே செயல்படுவதானால், பாஜ ஐடி பிரிவு மற்றும் அதன் தலைவர்கள் மீதுதான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டியிருக்கும்’ என்றார்.
சிறுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ராவும் எதிர்த்து உள்ளார். அவர் தனது டிவிட் பதிவில்,’ அன்புள்ள மோடி ஜி அவர்களே, ஆண்களும் கூட துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். உங்கள் அறிவுரைகளை ‘மகள்களுக்கு’ மட்டுமே என்று மட்டும் ஒதுக்காதீர்கள். அல்லது உங்கள் நல்ல நண்பரான எப்ஸ்டீன் பூரியிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று, 15 வயதுடையவர்களை ‘பெண்கள்’ என்று நம்பிவிடாதீர்கள். உங்கள் அடுத்த ‘ரீல்’ வீடியோவில் உங்கள் ‘மகன்’களையும் நீங்கள் குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* மோசமாக பேசிவிட்டேன்: இணையத்தை அதிர விட்ட சிறுமியின் மன்னிப்பு
பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நொய்டாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தை அதிர விட்டுள்ளது. உபி மாநிலம் நொய்டாவை சேர்ந்த 15 வயது சிறுமி கைகளை கூப்பிவாறு மன்னிப்பு கோரும் வீடியோவில்,’ நான் என் நண்பருடன் டெல்லிக்கு சென்றேன். அங்கு ஒரு போராட்டம் நடந்தது. பிரதமருக்கு எதிராக மோசமான கருத்துக்களை சொல்லி கொண்டிருந்தனர்.
என்னையும் ஏதாவது சொல்லுமாறு சொல்ல சொன்னதால் நான் தூண்டப்பட்டேன். நான் ஈர்க்கப்பட்டு சிலவற்றை சொல்லி விட்டேன். நான் செய்தது மன்னிக்க முடியாத ஒன்று.மிக மோசமான வார்த்தையைச் சொன்னேன். நான் இனி ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டேன்.ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
* பிரதமர் மோடி தோல்வியடைந்து விட்டார் ஷெஹ்சாத் பூனவல்லா கருத்து
பாஜ தலைவர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில்,’ பிரதமர் மோடி மீது நான் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன, அவர் ஒரு தோல்வியாளர். ஒரு சரியான சர்வாதிகாரியாக எப்படி மாறுவது என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்துகொள்வதற்குப் பதிலாக, அந்த மாணவர்களை மன்னிக்குமாறு சமூகம், காவல்துறை மற்றும் அனைவரிடமும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்கிறார். ராகுல் காந்தி, இந்திரா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் வாரிசு ஆவார். உண்மையான சர்வாதிகாரம் என்றால் என்ன, உண்மையான அவசரநிலை என்றால் என்ன என்பதை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் மோடி ஜி.
இன்று, குழந்தைகள் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, ‘அவர்கள் குழந்தைகள், தவறுகள் நடக்கத்தான் செய்யும். அவர்களைச் சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் உதவ வேண்டும்’ என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் ராகுல் ஜியோ, ஒரு உண்மையான சர்வாதிகாரியைப் போல, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்காக வழக்குகள் பதியச் செய்கிறார். மோடி ஜி, 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* ரீல்ஸ் மூலம் மன்னிப்பா? அல்லது வழக்கு வாபஸா?
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்ேக கூறுகையில்,’ போராட்டங்களின் போது தன்னை அவதூறாகப் பேசிய மாணவர்களை மன்னித்துவிட்டதாகக் கூறி, பிரதமர் மோடி ஒரு வாரத்தில் ஐந்தாவது முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் அரசு திரும்பப் பெறுமா ரீல் (வீடியோ) மூலம் மட்டுமே மன்னிப்பீர்களா அல்லது வழக்குகளையும் திரும்பப் பெறுவீர்களா? போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கைது செய்யப்போவதாக மிரட்டப்படுகிறார்கள். அரசின் தரப்பில் எங்கள் கவலைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.
