×

கேரளத்தில் பலத்த மழை, நிலச்சரிவு; தாய், மகன் உள்பட 8 பேர் பலி: நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

 

திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த சில வாரங்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மழையின் தீவிரம் மேலும் அதிகரித்தது. நேற்று 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் காலை முதல் இடுக்கி, கோட்டயம் பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் உள்ள மலையோரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

குடயத்தூர் அடூர்மலையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு மண்ணுக்கடியில் புதைந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த சுமதி என்ற பெண் உயிரிழந்தார். 2 பேர் மீட்கப்பட்டனர். இடுக்கி, கோட்டயம் மாவட்ட எல்லையில் உள்ள வாகமண் கோலாகலமேட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த வீட்டில் இருந்த பிரபாகரன் நாயர் (72) என்பவர் உயிரிழந்தார்.கோட்டயம் மாவட்டம் பூஞ்ஞார் தெக்கேக்கரை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ரெஜினா மற்றும் இவரது மகன் ஜோசப்பின் ஜோனி (24) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

மலப்புரம் மாவட்டத்தில் ஓடையில் விழுந்து ஆதம் என்ற 4 வயது சிறுவனும், அப்துல் முஹைனி என்ற 3 வயது சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்தனர். வயநாட்டில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி பென்னி என்பவர் உயிரிழந்தார். கோட்டயம் மாவட்டம் வாகத்தானம் பகுதியில் குழியில் தவறி விழுந்து ஐந்தாம் வகுப்பு மாணவன் மிலன் (10) உயிரிழந்தான். இடுக்கி மாவட்டம் உப்புதரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஜீப் மீது திடீரென மண் சரிந்தது. உடனடியாக ஜீப்பில் இருந்த போலீசார் இறங்கி ஓடியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஈராற்றுபேட்டை- வாகமண் சாலையில் மண் சரிந்ததை தொடர்ந்து அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மூணிலவு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் பத்தனம்திட்டா ஆகிய 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. இதைத்தொடர்ந்து ரான்னி பகுதி முழுவதும் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக பம்பை உள்பட 6 ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யார், பேப்பாறை மற்றும் அருவிக்கரை அணைகள் நேற்று திறக்கப்பட்டன.

* சபரிமலை பக்தர்களுக்கு தேவசம் போர்டு எச்சரிக்கை

பம்பையில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதால், இன்றும், நாளையும் நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள பக்தர்கள் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

 

Tags : Kerala ,Thiruvananthapuram ,Wayanad ,Kannur ,Kasaragod ,Malappuram ,
× RELATED படப்பிடிப்பில் நடனமாடிய போது நடிகை...