காவிரி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விஜய் கர்நாடகா வர வேண்டாம்: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பால் பயணம் ரத்து

 

சென்னை: தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்ததால் வருகிற 3ம் தேதி முதல்வர் விஜய் பெங்களூரு பயணம் ரத்து செய்யப்பட்டது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு புதிய முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக மழை பொய்த்து போகும் காலங்களில் இந்த பிரச்னை தலை தூக்கி வருகிறது. நடப்பாண்டும் கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.

இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என முதல்வர் விஜய் கருதுகிறார். எனவே அவர் காவிரி நதி நீர் விவகாரம், மேகதாது அணை பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேச முடிவு செய்து கடிதம் அனுப்பி இருந்தார். கர்நாடக முதல்வரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதற்காக முதல்வர் விஜய் வருகிற 3ம் தேதி பெங்களூருவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். பெங்களூரு விதானசவுதா (சட்டசபை வளாகத்தில்) மாநாட்டு அரங்கில் டி.கே.சிவகுமார், விஜய்யை சந்தித்து பேசுவார் என்றும், இந்த சந்திப்பின்போது தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய 13 பேர் குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில், தமிழகத்துக்கு 15 நாட்கள் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4½ டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

ஆனாலும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு தற்போது வரை செயல்படுத்தவில்லை. அதேநேரம், முதல்வர் விஜய் பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்நாடு விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்யுடன் டி.கே.சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று கர்நாடகாவில் உள்ள பாஜ உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம், காவிரி நீர் பிரச்னை குறித்து வருகிற 3ம் தேதி பெங்களூரு பயணம் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று காலை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமை செயலாளர் சாய்குமார், துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் வருகிற 3ம் தேதி பெங்களூரு செல்வதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று பிற்பகல் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம். இந்த சந்திப்பை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து வருகிற 3ம் தேதி முதல்வர் விஜய் மற்றும் குழுவினர் காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்னை குறித்து பெங்களூரு சென்று பேசும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. முதல்வர், பெங்களூரு செல்லும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி, காவிரி பிரச்னையில் சட்டரீதியாக எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தலாமா என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

Related Stories: