மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறையை மேம்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும். முழு நேர ஆணையரையும் நியமிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் அரிசி வியாபாரி. கடந்த 11.07.2025 அன்று லாரி ஒன்றில் அரிசியை அனுப்பியபோது, காவல் ஆய்வாளர் சுகுணா ரேஷன் அரிசி கடத்தியதாக அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
அந்த வழக்கில் என் பெயரை சேர்க்காமல் இருக்க என்னிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டார். இதனை நான் ஆடியோ பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்ஜன்குமார் ஆஜரானார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: லஞ்ச ஒழிப்புத்துறையின் விரிவான விசாரணை ஏற்கனவே முடிவடைந்து, ஆய்வாளர் சுகுணா மற்றும் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், மனுதாரர் கொடுத்த ஒலிப்பதிவு ஆதாரம் இருந்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமதப்படுத்தியது கண்டனத்திற்குரியது. லஞ்சம் வாங்குபவர்களை விட புகார் அளிப்பவரின் பின்னணியை ஆராய்வதில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை கவனம் செலுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்பு ஆணையர் பதவி நீண்டகாலமாக கூடுதல் பொறுப்பாகவே வழங்கப்பட்டு வருகிறது. தகுதியும், நேர்மையும் கொண்ட ஐஏஎஸ் அதிகாரியை முழுநேர லஞ்ச ஒழிப்பு ஆணையராக உடனடியாக நியமிக்க வேண்டும். அரசாணைப்படி அதிகபட்ச பதவிக்காலம் 7 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் சிலர் 10 முதல் 20 ஆண்டுகள் வரை ஒரே துறையில் நீடிக்கின்றனர். இது தவறான அதிகாரக் குவிப்புக்கும் குழு வாதத்திற்கும் வழிவகுக்கும். எனவே, சுழற்சி முறையில் புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ஏ என்பது நேர்மையான அரசு ஊழியர்களைப் பாதுகாப்பதற்காகத்தானே தவிர, லஞ்சம் வாங்குபவர்களையும் முறைகேடாகச் சொத்து சேர்ப்பவர்களையும் பாதுகாப்பதற்கான கவசம் அல்ல. லஞ்ச ஒழிப்புத்துறை சட்டப்பூர்வ அனுமதி தேவையில்லாத வழக்குகளிலும், அனுமதி கோரி நேரத்தை வீணடிப்பது சட்டத்தின் நோக்கத்தையே பாழாக்குகிறது. மாநிலத்தில் உள்ள சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்களைக் கண்காணிக்க வெறும் 152 லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். அதிலும் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு தபால் நிலையம் போல செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரியும் ஆண்டிற்கு 1 அல்லது 2 வழக்குகளை மட்டுமே கையாளும் அவலநிலை உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை பழைய காகித வழி முறைகளைக் கைவிட்டு, கோப்புகள் மற்றும் விசாரணைகளை விரைவுபடுத்த டிஜிட்டல் தளங்களை உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப வசதிகளை விசாரணையில் பயன்படுத்த வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத் துறையை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு 4 வாரங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். உயர்மட்டக் குழு தனது விரிவான அறிக்கையை 4 மாதங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு அதன் மீது 3 மாதங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த நடவடிக்கை அறிக்கையை 2027, ஏப்ரல் 2ம் வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
