நான் முதல்வன், விடியல் பயணம், காலை உணவு திட்டத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் நீக்கம்

 

ஊட்டி: நான் முதல்வன், விடியல் பயணம், முதல்வர் காலை உணவு திட்டம் பெயர்கள் மாற்றப்பட்ட வரிசையில். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கொண்ட குடும்பங்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை பெற்றுச் செல்வதில் ஏற்படும் இடர்பாடுகளை களையும் பொருட்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக எடுத்து செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் எந்தவித புதிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

மாறாக, முந்தைய திமுக அரசின் சில முக்கிய நலத்திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி வருகிறது. இதில் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டப் பெயரிலிருந்து ‘விடியல்’ என்ற சொல் நீக்கப்பட்டு ‘மகளிர் பயணம்’ என மாற்றப்பட்டுள்ளது. ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்பது ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டம் ‘திறன் தமிழ்நாடு’ என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த நடவடிக்கை முந்தைய அரசின் அரசியல் அடையாளங்களை நீக்கும் நோக்கில் இருப்பதாக மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் உள்ளது. இந்த சூழலில் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக புதிதாக வேறு எந்த பெயரும் வைக்காத நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் வயது முதிந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு 4,5ம் தேதிகளில் வழங்கப்படும். இத்திட்டத்தினை தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறி உள்ளார். தமிழக அரசின் இந்த பெயர் நீக்க நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: