ஆளும் கட்சிக்கு நெருக்கம் காட்ட அரசு நிகழ்ச்சிகளில் அதிகாரிகளால் புறக்கணிக்கப்படும் கவுன்சிலர்கள்: மேயர் பிரியா கண்டிப்பு

 

சென்னை: சென்னையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் மாமன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிகழ்ச்சிக்கு உறுப்பினர்களை கண்டிப்பாக அழைக்க வேண்டுமென மேயர் பிரியா தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. வழக்கமாக மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பணிகள் குறித்து அதிகமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆனால் இந்த முறை மாநகராட்சி கூட்டங்களிலேயே மிகக் குறைவாக 19 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது: தற்போது தமிழ்நாட்டை ஆளுபவர்களும், நம்முடன் இணைந்து சென்றவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தனிமைப்படுத்தி, தேர்தல் களத்திலிருந்து கழகத்தை அகற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

அவர்களின் முயற்சி எந்நாளும் பலிக்காது. திராவிட முன்னேற்றக் கழகம், உலகத் தமிழர்களின் வாழ்வோடும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் நலனிலும், தமிழ்நாட்டின் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்துள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சங்கு சுட்டாலும் வெண்மை தரும். அதுபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை கோட்பாடுகளிலிருந்தும் கொள்கைகளிலிருந்தும் சமரசம் செய்து கொள்ளாமல் என்றென்றும் மக்கள் மனதில் நீக்கமற நிலைக்கும். மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் கழகத்தின் வெற்றிப் பயணம் தொடர்ந்து பாடுபடும். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என்று ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில், இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு உறுதுணையாக வணிகச் சூழல்கள், வளங்கள், அரசியல் கொள்கைகள், உணவு முறை எளிமை, நிறுவனச் சூழல், நிதி நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், நீர் திறன் போன்ற அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்ந்துள்ளது. முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்குச் சிறந்த துறைமுக அமைப்பும், தண்ணீரின் விநியோகமும், முதலீட்டுக்கு உகந்த வணிகச் சூழலும், வலுவான ஏற்றுமதி செயல்பாடுகளும் முக்கியக் காரணங்களாக இருந்துள்ளன என்று ஒன்றிய நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக உயர்ந்ததற்கு திராவிட மாடல் அரசுதான் காரணம். தமிழ்நாடு அரசு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் என்று புதிய திட்டத்தை அறிவித்தது போல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் சென்னை மாநகராட்சியில் 2006 முதல் 2011 வரை பதவியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழக சென்னை மாநகராட்சி, மாநகராட்சி மருத்துவமனை மற்றும் அரசு/தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர் சூட்டினால் மாநகராட்சியின் சார்பில் தங்கம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலே ஆளுகின்ற அரசு எந்த திட்டங்களை அறிவித்தாலும் அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டங்களைதான் என பேசினார். அதனை தொடர்ந்து, கேள்வி நேரத்தில் பேசிய திமுக உறுப்பினர் பரிதி இளம் சுருதி பேசுகையில், கவுன்சிலர்களின் கோரிக்கை அடிப்படையில் வார்டுகளில் முடிக்கப்பட்ட பணிகளை, கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அமைச்சர்கள் மூலம் மண்டல அலுவலர்கள் திறக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். மேலும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களிடம் நெருக்கம் காட்டும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள் என பேசினார்.

குறுக்கிட்டு பேசிய மண்டல குழு தலைவர் கு.பி.ஜெயின், சென்னை மாநகராட்சி பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கும் போது கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை, முக்கியமான ஆய்வு உள்ள எந்தவொரு பணிகளுக்கும் அழைப்பு விடுப்பதில்லை என குற்றம் சாட்டினார். அப்போது பேசிய துணை மேயர், அதிகாரிகள் இதுபோன்று நடந்துகொள்ள கூடாது என்றும், மன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, அரசியல் வேறு, மக்கள் பணி வேறு, நிகழ்ச்சிகளுக்கு மன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் அழைக்க வேண்டியது கடமை. அனைவருக்கும் கட்டாயமாக அழைப்பு விடுக்க வேண்டும். அதில் கலந்துகொள்வது குறித்து அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். மேலும் அதிகாரிகள், தங்கள் பணியை அதிகாரிகளாக மட்டுமே செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கவுன்சிலர்கள் மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்று 3 மாதங்களாகியும் இதுவரை கவுன்சிலர் நிதி ஒதுக்கப்படவில்லை. மார்ச் மாதத்துடன் பதவி காலம் முடிவடைய உள்ளதால் விரைந்து நிதி ஒதுக்க வேண்டும். கவுன்சிலர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாமல் இருப்பதால் அடிப்படை பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. விரைந்து நிதி ஒதுக்க வேண்டும் என அதிமுக மன்ற உறுப்பினர் சத்தியநாதன், திமுக மன்ற உறுப்பினர் சர்பஜெயதாஸ், சிற்றரசு பாஜக மன்ற உறுப்பினர் என பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மேயர் பிரியா, கவுன்சிலர் மேம்பாட்டு நிதி சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. விரைந்து நிதி ஒதுக்க நகராட்சி நிர்வாக செயலரிடம் வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.

Related Stories: