திருமலை : ஆசிரியர் தேர்வுக்கான டி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர் ரோஜா தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஆந்திராவில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மெகா டிஎஸ்சி என்ற பெயரில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ததில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளது.
விளையாட்டு துறையின் ஒதுக்கீட்டின் கீழ் தகுது உள்ளவர்களை புறக்கணித்து தகுதி இல்லாதவர்களுக்கு போலிச் சான்றிதழ்கள் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறி கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் பதவி விலக வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
திருப்பதியில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்கே ரோஜா தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் பிரிவின் ஏற்பாட்டில் எஸ்.வி. பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நுழைவாயிலில் கண்டன பேரணி நடைபெற்றது.
பின்னர் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.கே ரோஜா பங்கேற்று பேசியதாவது: ஆசிரியர் தேர்வில் மெகா டி.எஸ்.சி. எனக்கூறி விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்.
டிஎஸ்சி ஊழலுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் லோகேஷ் பதவி விலக வேண்டும். ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான கல்விக் கட்டண நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளது. 191 வேலையற்ற இளைஞர்கள் இரண்டு ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சந்திரபாபு, வேலையற்றோருக்கு ரூ.3000 உதவித்தொகையாகத் தருவதாக வாக்குறுதி அளித்து அவர்களை ஏமாற்றினார்.
ஒன்றரை கோடிக்கும் அதிகமான வேலையற்றோர் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றனர். டி.எஸ்.சி முறைகேடு குறித்து எங்கள் கட்சியினர் போராட்டத்திற்கு அழைத்து விடுத்தவுடன் இதுகுறித்து நேரடியாக விவாதத்திற்கு தயார் என லோகேஷ் எங்கள் தலைவர் ஜெகன் மோகனை அழைக்கிறார்.
ஜெகன் மோகன் தைரியத்தைப் பற்றி சோனியா காந்தியிடம் கேளுங்கள், உங்கள் தந்தை சந்திரபாபுவிடம் கேளுங்கள். உன் சவாலுக்கு எங்கள் கட்சி தலைவர்கள் விவாதம் நடத்த தயாராக இருக்கிறார்கள் அவர்களுக்கு முதலில் சமாதானம் சொல்லுங்கள். சந்திரபாபு உங்கள் மகன் லோகேஷுடன் ராஜினாமா செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என எச்சரித்தார்.
