இந்தியாவின் எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான ஒரு நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் நிறுத்தியுள்ள இந்த அதிபயங்கர ஆயுதம் என்ன? அந்த ஆயுதத்தால் என்னென்ன கொடூரமான தாக்குதல்களை நடத்த முடியும்? இதற்கு ஒன்றிய அரசின் எதிர்வினை என்னவாக இருக்கும்? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கடந்த 2025ஆம் ஆண்டு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையே “ஆபரேஷன் சிந்தூர்”.
இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடங்கப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானின் ராணுவத் தளங்கள் பிரம்மோஸ் போன்ற அதிநவீன ஏவுகணைகள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. இந்தத் தாக்குதலால் தனது பீரங்கிப் படை திறன் பாதிக்கப்பட்டதாகக் கருதிய பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து SH-15 என்ற அதிநவீன பீரங்கிகளை வாங்கியுள்ளது. மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த பீரங்கிகள், வழக்கமான குண்டுகளை 30 முதல் 40 கிலோமீட்டர் வரையும், ராக்கெட் உதவியுடன் செயல்படும் குண்டுகளை 53 முதல் 72 கிலோமீட்டர் வரையும் சுடும் திறன் கொண்டவை.
பொதுவாக பீரங்கிகள் மெதுவாக நகரும் தன்மை கொண்டவை. ஆனால், பாகிஸ்தானின் இந்த புதிய பீரங்கிகள் நிமிடத்திற்கு 6 குண்டுகள் வரை சுடும் திறன் கொண்டவை. மேலும், எதிரிகளின் பதில் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே விரைவாக அந்த இடத்தை விட்டு நகரும் திறனும் இவற்றுக்கு உள்ளது. இவ்வளவு அதிநவீன திறன் கொண்ட சுமார் 250 பீரங்கிகளை இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் பல ராணுவ நிலைகள் மற்றும் முக்கிய தளங்கள் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், சீனாவுடன் இணைந்து தனது பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இருப்பினும், இவ்வளவு பெரிய ஆயுதக் களஞ்சியத்தை பராமரிப்பது பாகிஸ்தானுக்கு கணிசமான நிதி மற்றும் தளவாட வளங்கள் தேவைப்படும் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
