அசாம் மாநிலத்தில் விருந்துக்குச் சென்ற 15 வயது சிறுமி உடல் சிதைந்த நிலையில் காட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், மருத்துவ ரீதியாக அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். அங்கு உறவினர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, சிறுமி தனியாக வீட்டிற்குப் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், கட்லிசேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலோய் சோரா பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அவரது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசாம் மற்றும் மிசோரத்தை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவர் சிறார் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு அருகிலேயே போலீஸ் புறக்காவல் நிலையம் இருந்தும், போலீசார் தாமதமாக வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வழக்கு குறித்து பேசிய மூத்த காவல் கண்காணிப்பாளர் அமிதாப் சின்ஹா, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருந்தாலும், அது மருத்துவ ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகே அது குறித்து உறுதியாக கூற முடியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
தற்போது பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அசாம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
