திருமலையில் அவசர கால தடுப்பு நடவடிக்கை பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ளும் ஆக்டோபஸ் கமாண்டோ படையினர்

*தத்ரூப ஒத்திகையால் பரபரப்பு

திருமலை : திருமலையில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக ஆக்டோபஸ் கமாண்டோ படையினர் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தத்ரூப ஒத்திகையால் பக்தர்கள் மத்தியில் பரபரபரப்பு ஏற்பட்டது.உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆக்டோபஸ் கமாண்டோ கண்காணிப்பில் உள்ளது.

இந்நிலையில் திருமலையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ளும் அவசரகால எதிர்ப்பு தடுப்பு நடவடிக்கை திறனை சோதிக்கும் வகையில், ஆந்திர போலீசார், ஆக்டோபஸ் கமாண்டோ படையினர் இணைந்து திருப்பதி தேவஸ்தானத்தின் ஒருங்கிணைப்புடன் நேற்றுமுன்தினம் இரவு திருமலையில் உள்ள மாதவ நிலையத்தில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகள் மாதவ நிலையத்திற்குள் நுழைந்து, பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி, பணயக்கைதிகளாக பிடித்ததுபோல் கற்பனையான சூழலை உருவாக்கினர்.

பின்னர் திட்டமிட்டபடி அங்கு சென்ற ஆக்டோபஸ், போலீசார் மற்றும் பிற அவசரகால துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். தத்ரூபமாக மேற்கொண்ட ஒத்திகையால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்டோபஸ் சார்லி குழு டிஎஸ்பி ராம்பாபு, ஆர்.ஐக்கள் சதீஷ்குமார், நீலகண்டேஸ்வரராவ் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமுலு, திருப்பதி தேவஸ்தான ஏவிஎஸ்ஓ வெங்கடசிவகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர், சிறப்பு பாதுகாப்புப்படை, தீயணைப்பு, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகள் ஒருங்கிணைப்பு, விரைவான பதிலளிப்பு, பக்தர்கள் பாதுகாப்பு, பணயகைதிகள் மீட்பு, அவசரகால சூழ்நிலைகளைக்கையாள்வதில் சம்பந்தப்பட்ட துறைகளின் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

Related Stories: