*ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு
அந்தியூர் : அந்தியூர் அருகே மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் நேற்று காலை லாரி ஒன்று வந்தது.
அப்போது லாரியிலிருந்து பிளாஸ்டிக் பை ஒன்று வெளியே விழுந்தது. இதனை கவனித்த அப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் பையை பார்த்த போது அதில் மருத்துவக்கழிவுகளான கிளவுஸ், மாஸ்க் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த லாரியை சிறைபிடித்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து சுகாதாரத்துறைக்கும், பேரூராட்சி அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் லாரியை சோதனையிட்டனர். அதில் மருத்துவக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை உறுதி செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அவர் தர்மபுரி மாவட்டம் அரூர் கிளாப்பாறை பகுதியை சேர்ந்த காளியப்பன் (48), என்பதும் மொரப்பூர், தொட்டம்பட்டி பகுதியில் இருந்து இந்த கழிவுகளை ஏற்றிக்கொண்டு திருச்செங்கோடு சென்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரி டிரைவர் காளியப்பன் மற்றும் அதன் உரிமையாளரான அருள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்பு இவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
